அவருடைய ஷெனாய்

                                                                                               

khan-sahib

“எனக்கு வாசிக்க தெரியாது. என்னிடமும் இருக்கிறது ஒரு புல்லாங்குழல்.” இந்த கவிதையை படித்தபிறகு தான் சிறிது நேரம் கண்ணையர்ந்தேன் போல. கடைசி விரிவுரை வகுப்பும் முடிந்த பின்னும் என்னுடைய நாற்காலியிலேயே உட்கார்ந்து கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்து கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். நேற்று, வானம் இதே போல போக்கு காட்டிவிட்டு மழை பெய்யாமல் போனது. இன்றாவது பெய்தால் தேவலை என்றிருந்தது. டிசம்பர் தான். எனக்கு இன்று மழை வேண்டும். ஆனால் இவ்வளவு காற்றடித்தால் எப்படி வரும். எல்லா மாணவர்களும் கிளம்பி சென்ற இந்த வகுப்பறையில் சற்று அமைதியுடன் காற்றின் குரலோடு மட்டும் உட்கார்ந்திருப்பது நன்றாக இருந்தது. காற்றின் கிறுகிறுப்புக்கு ஒரே ஒரு துண்டு காகிதம் மட்டும் அலைக்கழிந்து கொண்டிருக்க, சிறுவன் போல ஓடிச்சென்று பிடித்தேன்.

 

யாரோ எழுதி வைத்திருந்த கணித சூத்திரங்கள். கசங்கிய காகிதத்தின் பின்பக்கம் இருவேறு கையெழுத்துகளில் ஆங்கில உரையாடல்கள். பாடம் நடத்தும்போது என் மாணவர்கள் எழுதி எழுதி பேசிக்கொள்ளும் வழக்கமிது. யாருடைய கையெழுத்தென்று அவதானிக்க முடியவில்லை.

 

ஜன்னலருகே நின்று எதையோ நினைத்தபடி எதுவும் நினைக்காதபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்த சமயம், அதிகம் பரிச்சயமான அந்த வாசம் என்னை கடந்தது. சார்மினார் சிகரெட்டும் One Man Show வாசனை திரவியமும் கலந்த,இங்கிருந்த ஆறு வருடத்தில் எனக்கு பிடித்தும் போன வித்தியாச நெடி. கணபதி தான் வெளியே நின்று புகைத்துகொண்டிருக்கிறார். இன்னும் ஏன் கிளம்பாமல் இருக்கிறார்? வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன்.

 

“என்ன இ.ஜி. இன்னும் வீட்டுக்கு புறப்படலையா?”

 

கணபதிக்கு அறுபதைக் கடந்த வயது. இதே கல்லூரியில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து, ஓய்வுபெற்று, பின் விசிடிங் பேராசிரியராக வந்து கொண்டிருக்கிறார். அறிமுகமான நாட்களிலிருந்தே எங்களுக்குள் ஒரு அற்புதமான நட்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருவருக்குமான முப்பத்திமூன்று வயது இடைவெளியெல்லாம் எங்களுக்கிடையே, வெவ்வேறு காலகட்டத்தில் தத்தமது வாழ்வை குறித்த உரையாடல்களில் உணர்வுப்பகிர்தல்களில், தன்னால் குறைந்து போனது. அவரது வீட்டின் பழைய புத்தக அலமாரிகளுக்கு இடையே நின்று, உணர்வுகளின் தீவிரத்துடன் இலக்கியம் பேசியதெல்லாம் கோட்டுசித்திரமாய் மனதில் நிழலாடுகிறது.

 

“வீட்டுக்கு போறதுக்குள்ள மழை வந்துடும் போல இருக்கு ரவி. குடை எடுத்துவர மறந்துட்டேன்”

 

“சரி. இன்னைக்கு என்கூட என்னோட வண்டியில வாங்க. வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன்”

 

“மை ஃபேட். என் வெயிட்ட தாங்குமா உன்னோட ஸ்கூட்டி பெப்?” என்று சிகரெட்டை சற்றே வெளியே எடுத்து சிரித்தார். “சரி வா போகலாம்”

 

மெயின் கேட் வரை ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். அவரது நடையில் சற்று தொய்வு ஏற்பட்டது போல ஒரு உணர்வு. கேட்கலாமா என்று நினைத்து, பிறகு கேட்டுகொள்ளலாமென தோன்றியது. பூங்கொன்றை மரங்களிலிருந்து காலை முதல் சாலையில் உதிர்ந்த பூக்களை இப்போது கூட்டிப்பெருக்கி சிறு சிறு குவியலாக்கிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள்.

 

“இந்த மரத்தோட முதல் பூ உதிர்ந்த நாட்களை நினைச்சு பார்க்கிறேன், ரவி. நாப்பது வருஷம். ஏதோ செய்ய நினைச்சு எங்கேயோ வந்தடயர இந்த வாழ்க்கை. சில நேரங்கள்ல கிடைச்சதவிட தவறவிட்டது அதிகமோனு தோணுது” மென்மையாக என் தோளைத் தட்டியவாறே சொன்னார்.

 

“என்ன இ.ஜி. நீங்களே இப்படி சொல்லிட்டீங்க. ஐ ஆல்வேஸ் யூஸ்ட் டு என்வி யூ. எ லைஃப் ஃபுல்லி லிவ்ட் என்று நினைச்சு பார்த்தா உங்க பிம்பம் எனக்கு வராம இருக்காது. ஆர் யூ அல்ரைட்?” என்று அவரை பார்த்து அமைதியாக கேட்டேன்.

 

“யா யா ஐ அம் அல்ரைட். கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு. ஐ தின்க் ஐ ஷுட் க்விட் ஸ்மோகிங். Damn this. வா கான்டீன் போயிட்டு டீ சாப்பிட்டு போவோம்” என்று சட்டை பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை தூக்கி பக்கத்திலிருந்த குப்பைதொட்டி நோக்கி எறிந்தார். அருகிலிருந்த மரத்திலிருந்து ஒரு காக்கை எட்டிப்பார்த்து போனது.

 

“ரொம்ப நாள் கழிச்சு டிடி-யில நேத்து உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானோட இசை நிகழ்ச்சி ஒண்ணு பார்த்தேன், ரவி. அது என்னவோ அதிசயமா நான் டிவி பார்க்கும்போது ஓடிட்டு இருந்துச்சு. இப்போ எல்லாம் அதிகம் கேக்றதில்ல, ஏன்னு தெரியல. எய்டீஸ்-ல கல்கத்தாவிற்கு நான், தேவநாதன், ப்ரொபசர் மார்கரெட் மூணு பேரும் அனைத்திந்திய பேராசிரியர் மாநாட்டிற்கு போயிருந்தப்போ, எதேச்சையாக தேவனாதனோட நண்பன் சுமித் கோஷால் உஸ்தாத்துடைய இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்ஸ் கொடுத்தான். தேவநாதன் ஒரு கர்னாடிக் பித்து. அவன் அப்பா அவன விட. ரோட்டுல போற ஆட்டோ அடிக்கிற ஹாரனுக்கு என்ன ஸ்ருதி என்று சொல்ற கேஸ். அவனுக்கு கர்னாடிக் தான் உசத்தி. நானோ அதிகம் வெஸ்டெர்ன் க்ளாசிக்கல் கேட்கிறவன். கிடைச்ச வாய்ப்பை விட வேண்டாம் என்று போனோம்” என்று அவரது கண்கள் என்னைத் தாண்டி ஏதோ சூன்யத்தை நோக்கியவாறு சொன்னார். அவர் பேச ஆரம்பிக்கும்போதே கான்டீன் உள்ளே நுழைந்திருந்தோம். பெரிதாக ஒரு கூட்டமுமில்லை.

 

“அதற்கு முன்னாடி நீங்க கேட்டதில்லையா அவரை?”

 

“நேர்ல அது தான் ஃபர்ஸ்ட் டைம். அப்படி ஒரு வசீகரம் எந்த இசைக்கலைஞனிடமும் நான் கண்டதில்ல”

 

“கணபதி ஐயா, என்ன இந்த நேரத்துல இங்க? அதான் வெளிய மழ  வராப்ல இருக்கா?” என்று மணிவாசகம் அண்ணன் டேபிளை துடைத்தபடி என்னை பார்த்தும் ஒரு வணக்கப்புன்னகை வைத்துவிட்டு சொன்னார்.

 

மணிவாசகம். இ.ஜி.யின் அறிமுகத்தில் எனக்கு கிடைத்த ஒரு நல்ல ஆத்மா. நாற்பது வருடங்களாக இந்த காண்டீனில் பணிபுரிகிறார்.

 

“வெளிய மழை வர்றது போல இருக்கிறதால தான் உங்க ஐயா உள்ளே வந்திருக்கார் இன்னைக்கு” என்று என் கையிலிருந்த தடியான இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் புத்தகத்தை மேஜையில் வைத்து அதன் மேல் கை வைத்து அதன் மேல் தலை சாய்த்து கேட்டேன்.

 

“வரப்போற செமஸ்டர் லீவுல புது கான்டீன் வேலைங்க ஆரம்பிக்குதாமாம். இப்போ இருக்றதுல என்னத்த குறை கண்டான்களோ எனக்கு தெரியல. ஒரு வாரமா மனசே இல்ல. நடுசாம நேரத்துல கூட ரெண்டு எட்டு இத வந்து பாத்துட்டு போறேன்” சூடான இரண்டு கோப்பை தேநீரை வைத்து விட்டு சொன்னார் மணி.

 

எதுவும் பேசாமல் அமைதியாக அவரை பார்த்தார் இ.ஜி.

 

“என்னவோ போங்க. கொஞ்ச காலத்துக்கு மனுஷன் ஆசுவாசமா இருந்திட்டு போகலாமின்னு பார்த்தா…” என்றார் மணி.

 

உழைத்தே உறுதியாகி, பின் அந்திம வயதின் சுருக்கங்களோடு தசைகள் தளர்ந்து போன ஒல்லியான நீண்ட கரிய உருவமாய் மணிவாசகம் அண்ணன் சமையல் கூடத்தினுள் நுழைந்தார். அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் திரும்பினார்.

 

“இன்னும் சின்னப்பையன் மாதிரி இருக்கான் பாரேன் இவன். கிட்டத்தட்ட என் வயசு தான் இருக்கும். நான் இங்க டீச்சிங் அசொசியட்டா சேர்ந்தபோ இவனும் கான்டீன் வேலைக்கு சேர்ந்தான். புது காண்டீனிற்கு கட்ட போறதுக்கு ஏன் இவ்ளோ சலிச்சுக்குறான் தெரியுமா?”

 

“ஏனாம்?”

 

“லவ்லி ரீசன் யூ நோ. இந்த கான்டீன் கட்டும்போது கட்டிட வேலைக்கு வந்த வளர்மதிய தான் கலியாணம் செஞ்சுகிட்டான். சமையலறையை பெருசு பண்றதுக்கு காண்டிராக்ட் வேலை வந்தவ. ரெண்டு பேருடைய கை அச்சு சமையலறை சுவரோரம் ஒன்னு உண்டு. புது கான்டீன் வந்தா காணாம போய்விடும். வேற என்ன, அதான் மணி இப்படி நொந்துக்கிறான் ”

 

தேநீரை இருவரும் அமைதியாய் பருகி முடித்தோம்.

 

“அட. இவ்வளவு ரொமாண்டிக் ஆளா நம்ம மணி அண்ணன். இத்தனை வருஷத்துல எனக்கு தெரியவே இல்ல பாருங்களேன்”. பாதி குடித்த தேநீர் கிளாசின் வரிகளை கவனித்துகொண்டிருந்தேன்.

 

“அவனை வெச்சு நீ ஒரு நாவலே எழுதிடலாம். என்ன பேசிட்டு இருந்தோம் இதுக்கு முன்னாடி?”

 

“பிஸ்மில்லாஹ் கான் இன் கல்கத்தா.”

 

“ஓ, எஸ். இன் கல்கத்தா”

 

“வென் வீ வேர் இன் எய்ட்டீஸ்”னு நீங்க சொல்ற எல்லா விஷயங்களுக்கும் பின்னாடி என்னோட உள்ளார்ந்த ஏக்கத்தையும் சேர்த்துகோங்க இ.ஜி. இளையராஜாவோட நெறைய சாங்க்ஸ்ல ஆழ்கடல் மீன்களாய் நீந்துற பாஸ் கிடார் போல”

 

மெதுவாய் புன்னகைத்தார். சில வேளைகளில் எனக்கு தோன்றுவதுண்டு. எனது முதுமையின் சுருக்கங்களை இவரிடம் காண்கிறேனா? அல்லது அவரது இளமையின் மறுவார்ப்பை வாழ்ந்துகொண்டிருக்கிறேனா? அவர் நானல்ல. நான் அவரல்ல. ஆனால், என்னால் ஏதோ அறியமுடியாத ஒன்று, அவரது இறந்தகாலத்தையும் எனது எதிர்காலத்தையும் எங்கோ கால இடைவெளிகளில் நீர்த்துப்போன, கோடு போன்று செல்லும் நதிநீராய், கண்ணுக்கு தெரியாத இழையாய் இணைக்கிறது.

 

“உன்னோட பிளேயர்-ல இருக்கா இப்போ? எப்பவுமே உன் கூடவே தான எடுத்துட்டு வருவ உன்னோட மியூசிக் பிளேயர?”

 

“இருக்கு இ.ஜி. போன வாரம் தான் ஹரி நிறைய பாடல்களையும் ஹிந்துஸ்தானி கலக்ஷன்சும் கஸல்சும் காபி பண்ணிக்கொடுத்தான்” என்று பையில் இருந்து வெளியே எடுத்து ON செய்தேன். “ஹிந்துஸ்தானி” தொகுப்பில் சில இசைத்துணுக்குகள் இருந்தன.

 

“எனக்கென்னவோ இப்போவே கேக்கணும் போலிருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு போவோமா?”

 

அதற்கும் ஒரு மௌனப்புன்னகை.

 

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் – ராக மதுவந்தி – 13 நிமிடங்கள் – ஓடவிட்டேன்.

 

புத்தகத்தின் மீது தலை சாய்த்து  காதுகளில் காதணிகளை மாட்டிவிட்டு இசையை ஓடவிட்டேன்.

 

முதலில் இருள். பின் வெறும் பிம்பங்கள். வாழ்வின் முன்னும்பின்னுமாய் முக்கியமான முக்கியமற்ற நினைவுகள் காரண காரியமற்று ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கிக்கொண்டே செல்கிறது. புகைப்படக்கலைஞனின் இருள் சூழ்ந்த அறையில் தொங்கவிடப்படும் புகைப்படங்கள் போல. அதன் விளிம்புகளில் நுட்பமான துளையிட்டு கோர்க்கும் கயிறு போல ஷெனாய் வாத்தியம்.

 

 

உஸ்தாத். என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?

 

 

– அப்பாவுடன் என் சிறுவயதில் சுற்றுலாவிற்கு சென்ற பொது அதிரம்பள்ளி அருவியில் குளித்து, பின் ஒரு குடிசைக் கடையில் குண்டு அரிசியில் முதல் முறை சாம்பார் சாதம் சாப்பிடத்  துவங்கும் முன், குடிசை ஜன்னலில் வழி தூரத்தில் அதே அருவியை கண்டபொழுது என் உடல் சிலிர்த்த அந்த கணம், கையிலிருந்த சோற்று பருக்கைகள் தெறித்து கீழே விழ, தாங்கவொண்ண சந்தோஷத்தில் சிரித்த அந்த கணம்,

 

– மூன்று ரூபாய் திருடி அம்மாவிடம் அடிவாங்கி, பின் அழுதுகொண்டே ஓடி பாட்டியின் மடியில் வீழ்ந்து அழுத கணம், என் நாசியேறிய அவளது புடவை வாசனை, ஜன்னல்கம்பியை சுவைத்தது போல,

 

-லில்லிக்கு கொடுத்த முதல் முத்தத்திற்கு பின் அவள் உச்சந்தலைக்கு பின்னே வானில் தரிசித்த ஒளிர் நட்சத்திரம்,

 

-சிதம்பரம் விரைவு ரயிலில் ஜன்னலோரம் புத்தகம் படித்துச்செல்லும் நான் ஒரு சிறு நொடி வெளியே பார்த்தபோது,  வெள்ளத்தில் ஓடும் ஓடையில் குறுக்காக வயிறூதி இறந்து கிடந்த மாட்டுக்கன்று ஒன்று,

 

உஸ்தாத். என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றீர்கள்?

 

பனித்துப் போன கண்களை திறந்தேன்.

 

“வெளியேயும் நல்ல மழை” என்றார் இ.ஜி

மழை நன்றாக வலுத்திருந்தது.

 

மூக்கின் ஓரமாய் படர்ந்த கண்ணீரை சற்று நளினமாய் துடைத்துப் பின் கேட்டேன். “மியூசிக்கையும் இமேஜஸையும் என்னால ஏன் பிரிச்சு பாக்க முடியலனே தெரியல. எப்பவுமே அப்படித்தான் இருக்கு இ.ஜி. ம்ம். அத எப்படி சொல்றது… சில நேரத்துல நான் நேர்ல பார்த்த அதே காட்சி , பீத்தோவன், ரவிஷங்கர் மாதிரி கேக்கும்போதெல்லாம் என்னையறியாம மனத்திரையில புதுவர்ணம் பூசிட்றது போல ஆயிடுது. வேற ஒரு டைமென்ஷன் கெடைசுட்டது போல. இல்ல, அந்த காட்சியுடைய உண்மையை உரிச்சு காட்டிட்றது மாதிரி.. ஐ டோன்ட் நோ ஹௌ டு புட் இட் ப்ரோபெர்லி..”  கணபதிக்கு பின்னால் இருந்த கேண்டீன் சுவற்றை பார்த்து சொன்னேன். “யெஸ். இட் இஸ் லைக், பூசின பழைய சுண்ணாம்பு, நான் கேட்கிற இசையோட அதிர்வுகளுக்கு ஏற்ப உடைஞ்சு விழுந்து கடைசில நிர்வாண சுவராக மனசு மாறிடுது”‘

 

என்னை ஊடுருவது போல பார்த்தார்.

 

“”பட், உன்னோட எந்த இமேஜ் உன்னோட கண்களை இப்போ நனைச்சுது, ரவி?””

 

“வயிறூதி ஓடையோட குறுக்கே செத்து போயிருந்த மாட்டுக்கன்னு ஒண்ணு. திருச்சியில இருந்து சிதம்பரம் எக்ஸ்பிரஸ்-ல சைடு லோயர்-ல உட்காந்து புக் வாசிச்சுட்டு போகும்போது பார்த்தேன். பாராங்கல்ல மோதி வழி மாறி போற வெள்ளத்தண்ணி மாதிரி, அந்த மாட்டுக்கண்ண தாண்டி போய்ட்டு இருந்துச்சு. ஒரு செகண்ட் தான் இருக்கும், இ.ஜி. ஒரு சின்ன பாலத்த கடக்கும் போது பாத்தேன். அந்த சீன் என்னை தாண்டிப்  போய்டுச்சு. ஆனா ஓடிப்போய் கதவண்டை நின்னு திரும்பிப் பாத்தேன். சட்டுன்னு அந்த இயற்கை வனப்புடைய லேண்ட்ஸ்கேப் எனக்குள்ள ரொம்ப பெரிய தாக்கத்தை உருவாக்கிடுச்சு. ஏன்னா அந்த பரந்த வெளியில வேற எதுவுமே இல்லை. வேறு மனுஷங்களோ , ஆடு மாடுகள கூட காணல. நான் இங்க இந்த இடத்துல செத்து போயிருக்கிறேன்னு சொல்லக்கூட முடியாத நிலையில தான் எல்லா உயிர்களோடைய வாழ்க்கையோன்னு எதெதையோ யோசிச்சுட்டே போச்சு அந்த பயணம். ஆனா அந்த இமேஜ் இப்போ எனக்கு வேற ஏதோ சொல்ற மாதிரி இருக்கு.”

 

“ம்ம். எதுவும் சொல்லவேணாம் ரவி” என்று தேநீர் கிளாசின் அடியை வருடியபடி என்னை பார்த்து சொன்னார். சட்டென லில்லி ஞாபகத்துக்கு வந்தாள். நான் சொல்லவருகிற விஷயம் முன்னமே புரிந்து போய், அதை நான் சொல்லவிடாமல் நிறுத்தி விடுவாள். குறிப்பாக இயற்கையை குறித்து சிலாகித்து பேசும்பொழுது. வார்த்தையாக வெளிவந்துவிட்டால் அதன் கனம் குறைந்துவிடும் என்று சொல்வாள்.

 

“லில்லி கூட ஒரு முறை இப்டி சொன்னா. அவ கேக்குற சில அற்புதமான பாடல்களையெல்லாம் அவ மனசுல இந்த மாதிரி ஓடுமாம். மியூசிக் ஓட ஓட, ஒரு வெள்ளை பேப்பர்ல யாரோ கிறுக்கிகிட்டே போற மாதிரி. கோட்டோவியமின்னு சொல்ல முடியாது. குழந்தை கிறுக்கல் மாதிரி. கலர் கலர் பென்சில்கள்ள.. இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்க்கு ஏத்த மாதிரி. நான் பதில் சொன்னேன், “நீ கிறுக்கி போட்ட அந்த பேப்பர எடுத்து பாத்து அதே பாட்ட பாடி காமிச்சா எப்படி இருக்கும் உனக்கு?”, “போடா கிறுக்கா” ன்னு என் தலையை தட்டினா”

 

“அவளை நீ இழந்திருக்ககூடாது, ரவி. நானும் அவளை மீட் பண்ண முடியாம போய்டுச்சு. யூ டூ மிஸ் ஹெர், ரைட்?”

 

நான் எந்த பதிலும் சொல்லவில்லை. கையிலிருந்த புத்தகத்தின் அட்டை நுனியை மடித்து பிரித்து, மடித்து பிரித்துக்கொண்டிருந்தேன்.

 

“பட், திஸ் இஸ் த வே அவர் ஃலைப் கோஸ்” என்றார்.

 

இத்தனை நேரமும் கனத்த மழையின் இரைச்சலினூடாக தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது,மழை சுத்தமாக விட்டபின் ஏற்பட்ட அமைதியில் புரிந்தது.  எல்லா பெருஞ்சப்தத்திற்கும் இடையில் நிகழும் ஒரு கன நேர அமைதி. நம்மை கொஞ்சம் சரி பார்த்துக்கொள்ள நேரம் கொடுப்பது போல. மஞ்சளும் ஆரஞ்சு நிறமுமாய் சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய கடவுள் போன்ற மென்மையானதொரு வெளிச்சம் ஜன்னலினூடாக எங்கள் டேபிள் மீது  நீள  ஆரம்பித்து, அதன் பிரதிபலிப்பு இ.ஜி மீது விழுந்தது. அவர் கண்களில் இன்று பார்த்த ஜீவனை இதுவரைக் கண்டதில்லை என்பது போன்ற வித்தியாச மயக்கம். மனதினுள் ஒரு நிழற்படம் எடுத்துவைத்துக் கொண்டேன்.

 

“ஐ மஸ்ட் லீவ் நவ் ரவி” என்று மணிவாசகம் அண்ணன் கொடுத்த குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

நாளை மாலை அவர் வீட்டிற்கு வருவதாய் சொல்லி பின் விடைபெற்றுக்கொண்டேன்.

 

அதே மாலையில், ரொம்ப நாளாக இரவல் வாங்கிய புத்தகங்களை , அரவிந்தன் வீட்டிற்கு சென்று அவற்றை கொடுத்துவிட்டு , கல்லூரி விடுதிக்கு திரும்பும் வழியில் சானடோரியம் ரயில்வே நிலையத்திற்கு சற்று தள்ளி இருந்த ஐக்கிய கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தின் வாயிலினுள்ளே இ.ஜி. நுழைவதைக் கண்டு வண்டியை சிறிது தள்ளி நிறுத்தி இறங்கினேன். தனது திரண்ட உடலை வைத்துக்கொண்டு ரோட்டோர சாக்கடைத் தண்ணீரை மிதிக்காமல் கவனத்துடன் உள்ளே நுழைந்தார். இன்னும் சில நிமிடங்களில் இருள் வந்துவிடுகிற கம்மிய வெளிச்சம். அதன் வாசல் கதவின் அருகில்சென்றேன். அவர் செல்லும் திசையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க, இரண்டு பூனைகள் அருகிலிருந்த கல்லறையை லாவகமாக தாண்டி விளையாடிக்கொண்டிருந்தன. சிவந்த அடிவானம் மேலும் இறங்க, ஒரு சில்லவுட்(silhoutte) புகைப்படமாய் அவரது உருவம் தரையை பார்த்தவாறு, அதன் முன் ஒரு கல்லறை. அவரது முதுகுப்புறம் மட்டும் எனக்கு தெரிய, அவரது பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து கல்லறையின் சிமிண்டு தளத்தில் வைத்து, அமைதியாக நின்று  கொண்டிருந்தார்.தியானிப்பது போல. ஏதோ ஒரு கணம் அவர் உடல் குலுங்கியதா,அல்லது எனக்கு அப்படி தோன்றியதா?

 

மழையில் ஊறி உப்பித் திளைத்திருந்தன உறங்கும் ஆத்மாக்கள். ஒரு சில கல்லறைகளில் புத்தம்புதிய பூங்கொத்துகள் முகம் சிலிர்த்து, புன்னகைத்துக்கிடந்தன. தூரத்தில்  அமைதியாக தோட்டச்சுவரை ஒட்டி நின்றேன். மெல்லிய சிலிர்ப்புடன் ஈரம் என் சட்டையை தழுவியது. சுவற்றின் ஈரத்தை தடவிப்பார்க்க, ஓரமாக துளிர்த்திருந்த அரசிலை தட்டுபட்டது. மெளனமாக கண் மூடி அவ்விலையை ஸ்பரிசித்து நின்றேன் சிறிது நேரம். தெளிவற்ற நீரோட்டமாய் ஓடும் சிந்தனைகள். இரும்பு கேட் சீழ்க்கையிட்டது போல ஒரு சப்தம். இ.ஜி. கிளம்பி விட்டிருந்தார்.

 

கல்லறையை நோக்கி சென்றேன். சங்குப்பூ கொடி  அங்குமிங்கும் படர்ந்திருக்க, புதிதாய் வந்த அவ்விருளிலும் ஊதா நிறம் கண்களுக்கு புலப்பட்டது போலிருந்தது. செல்பேசியின் வெளிச்சத்தில் பெயரை படிக்க முயன்றேன்.

 

  1. லிடியா ஜோசப்

தோற்றம்: 30.06.1960

மறைவு: 06.12.1980

 

ரப்பர் மரத்து பிசின் போல கேள்விகள் என்னிலிருந்து கசிய ஆரம்பித்தது. இன்றைய உரையாடல்கள் எல்லாமும் இங்கு நான் வருவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தானா? மஞ்சள் வெளிச்சம் படர்ந்த அவரது முகம் மனதில் நிழலாட, முகம் தெரியாத முகமற்ற முகமாய் லிடியாவும் இருளில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

 

****

 

மணி பனிரெண்டை கடந்திருந்தது. டிசம்பர் பனி. சாயுங்கால மழை கொஞ்சம் பனியை  குறைத்திருந்தது. தூக்கம் வருமென படித்துக்கொண்டிருந்த இந்த மானுடவியல் புத்தகமும் உதவிக்கு வரவில்லை. எழுந்து உட்கார்ந்து போர்வையை உடலில் போர்த்திக்கொண்டு அருகில் இருந்த தேவதேவன் கவிதை தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை வாசிக்கவும் ஒன்றிடாத இந்த மனதை மல்லுகட்ட முடியாமல் அதையும் மூடிவைத்து ஜன்னல் வழி பார்த்தேன். முதல் தளத்தில் இருந்த எனது அறையிலிருந்து பார்த்தால் மெஸ்ஸிலும் கேண்டீனிலும் வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் விடுதி தெரியும். விடுதியின் முன்பு குவித்து வைத்திருந்த மணல்மேட்டில் உட்கார்ந்து மணிவாசகம் பீடி இழுத்துக்கொண்டிருந்தார். தலையில் காது வரை மூடியது போல் துண்டை சுற்றியிருந்தார். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கையில் ஒரு நிழல் மாத்திரம் புகைபிடிப்பதை போல தெரிந்தது. அவ்வெளிச்சத்தில் கண்ணுக்கு தெரியாத மகரந்தங்கள் இரவுடன் நடனமிடுவதைக்  கண்டது போல ஒரு மயக்கம்.

 

“”மணிவாசகம் அண்ணா” என்று சப்தமிடாமல் அவருக்கு மட்டும் கேட்பது போல சப்தித்தேன்.

 

கொன்றை மரம், இறகு பந்து மைதானம், மழை நீர் தேங்கிய குட்டையை கடந்து அவரை அடைய, அறையின் வெளிச்சத்தில் என்னைக் கண்டுகொண்டவராய், “யாரு?ரவி சாரா? என்ன இன்னும் இந்த நேரத்துலயும் தூங்காம?”  சற்று அருகில் வந்து பேசினார்.

 

தேநீர் சாப்பிடுவது போல சைகை காண்பித்து, “டீ கிடைக்குமா இப்போ?” என்றேன்

 

“எனக்கும் தூக்கம் வரல, ரவி சார். டீ சாப்டா கொஞ்சம் தேவலாம் போல தான் இருக்கும். எறங்கி வாங்க”

 

கதவை வெளிப்புறம் தாழிட்டு அவர் அறைக்கு சென்றேன்.

 

ஒரே ஒரு மெழுகுவர்த்தியும், சிமினி விளக்கும் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. குளிருக்கு இதமாய் எரிகின்ற சுடர்கள்.

 

“சாயுங்காலம் பெஞ்ச மழைல போன ஃபியூஸ். இன்னும் வரல. இந்த ரெண்டு வாரத்துல மட்டும் நாலு தடவ இப்படி போயிருக்கு” என்று திரியை சற்று மேலெழுப்பினார். உயிர்பெறும் சுவரோவியம் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். “ரெண்டு நிமிஷம் பொறுங்க”

 

உள்ளறையிலிருந்து தேநீருடன் வந்தார்.

 

“லிடியா ஜோசெப்பை உங்களுக்கு தெரியுமா அண்ணா?” தேநீர் அருந்திய பின்னான அமைதியை கலைத்தேன்.

 

இ.ஜி-யை  கல்லறை தோட்டத்தில் கண்டதை அவரே புரிந்துகொண்டது போல, என்னை பார்த்தார். இருளில் எங்கள் கண்கள் சந்தித்து மறுபடியும் எங்கள் நிழல்களை பார்த்தன.

 

“அது இருக்கும் முப்பத்தஞ்சு வருஷம். சொல்லப்போனா இன்னையோட சரியா முப்பத்தஞ்சு வருஷம். அன்னைக்கு எப்பவும் போல தான் காலேஜுக்கு போனாரு. அவரும் உங்களை மாதிரி தான் கொஞ்சகாலம் ஹாஸ்டல்ல தங்கி போயிட்டு இருந்தாப்ல.. ஹாஸ்டல் பசங்களுக்கு எல்லாம் ஒரு தைரியம் அவரு. ஒடம்புக்கு காய்ச்சல், திடீர்னு பீஸ் கட்ட முடியல, பசங்களோட பிரச்சினைகளையெல்லாம் அவர்கிட்ட தான் கொட்டி தீர்ப்பாங்க.  ஏதோ ஒரு வகையில அவர பிடிச்சுடாம போய்டாது, அப்பிடி ஒரு வசீகரம் அவர்ட்ட. அப்படி தான் லிடியா ஜோசெப்புக்கும் அவரை பிடிச்சு போச்சு. இல்லனா, அதையும் தாண்டி”

 

“ம்ம். இ.ஜி-யோட ஸ்டுடென்ட்டா அவங்க?”

 

“ஆமாம். ரொம்ப பிடிச்ச ஸ்டுடென்ட்டும் கூட. சனி ஞாயிறுகள்ள கணபதி ஐயாவ ராஜம் ஹால் பக்கத்துல இருக்குற அரசமரத்தடி சிமெண்ட் பெஞ்சுல பார்க்கலாம். சதா சர்வ காலம் எதையாது படிச்சுட்டே இருப்பாரு. லிடியா ஜோசெப் அவர்கிட்ட நெறைய புஸ்தகங்கள் வாங்கி படிப்பாங்க. அத பத்தி பேசுவாங்க. ஒரு முறை என்கிட்ட சொல்லவும் சொல்லியிருகாப்புல. அவங்க திறமைக்கு பெரிய படிப்பெல்லாம் படிச்சு நல்ல இடத்துக்கு போவாங்கனு. அது என்னவோ, அவர் மேல அப்புடி ஒரு பிரியம். கடல்ல தூக்கி போட்ட ஒத்தை செருப்பு மறுபடி மறுபடி கரைக்கு வந்து சேந்துட்ற மாறி. இந்த பிரியமெல்லாம் அவருக்கும் தெரியாமலாம்  இல்ல. அத வெச்சு என்ன செய்றதுன்னு தெணறி போய்  தான், அவங்கள அன்னைக்கு சாயுங்காலம் அப்படி கண்டிச்சி பேசினாரு. அதுவும் அந்த கான்டீன்ல தான்”

 

இருபத்துஒன்பது வயது இ.ஜி-யை நினைத்து பார்த்தேன். ஆசிரியனுக்கும் மாணவிக்கும் இடையே தெளிவானதொரு கோடு போடும் அந்த கண்டிப்பு பேச்சு.

 

“அழுதுட்டே வெளிய போனாங்க அந்தம்மா. அடுத்த நாள் காலைல காலேஜ் வந்தவங்க,  குரோம்பேட்டை ரயில்வே ட்ராக்கை கிராஸ் பண்ணும் போது..”

 

மணிவாசகம் அண்ணனுடைய முகம் வெளிறிப் போனதை அந்த குறைந்த வெளிச்சத்திலும் கண்டேன்.

 

“எல்லாருக்குமே தெரியும் அது ஒரு விபத்து தான்னு. ஆனா கணபதி ஐயா, நடந்த எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாள் லீவ் போட்டு ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தப்போ, பழைய கணபதி ஐயாவ அங்கேயே வெச்சுட்டு வந்துட்டது போல இருந்தது. கிளாஸ் போயி வந்த நேரம் தவிர ரூம்லேயே தான் இருந்தார். படிக்கிறதை எல்லாம் நிறுத்திட்டாருன்னு கூட நெனக்கிறேன்.காலேஜ் மூலமா கல்கத்தா டூர் ஒன்னு போயிட்டு வந்தப்போ தான் அவர் ஊருல தொலைச்ச அவரை  அந்த ஊருல இருந்து கொண்டுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. ஆனா வரும்போது நாதஸ்வரம் மாதிரி ஒரு வாத்தியமும் கூடவே வந்துச்சு. கூடவே நெறைய காசெட்டுகளும். ஆத்துக்கு அந்த கரையில இருக்கிற வயல்ல நாத்து வெக்கிறவங்க பாடுற பாட்ட, இந்த கரையில ஆத்துல வலை போட்டுட்டு கரைமேட்டுல ஒக்காந்து கேட்கிற மாதிரி இருக்கும், அவரோட ரூமிலேர்ந்து வர்ற அந்த வாத்தியத்தோட சத்தம். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன் அதுக்கு பேர் ஷெனாயின்னு. அதையும், அவரோட ரூமுக்கு ஒரு நாள் போனப்போ தான் சொன்னாரு அவருக்கு. இப்போ கூட அதை வாசிக்க தெரியாது. ஆனா வெச்சுருக்காரு”

மணிவாசகத்தின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது அவரது நிழலில் தெரிந்தது.

“”அதுக்கப்புறமும் கூட, அவரோட ஏதோ ஒன்னை மொத்தமாவே விட்டுட்டு வந்துட்டாரு . எல்லார்ட்டயும் நல்லாவே பழகினாரு. இப்ப எப்படியோ, அப்பவும் அப்படித்தான். ஆனா, அந்த கணபதி ஐயாவ நீங்க இனி பாக்க முடியாது”

 

இருவரும் வெளியே வந்தோம். குளிர் அதிகமாகியிருந்தது. நான் என்னுடைய அறைக்கு நேர் கீழுள்ள அறையில் இருந்து ஷெனாய் இசை வருமென காத்திருந்தேன்.

*****

 

அடுத்த நாள் மாலை அவர் வீட்டிற்கு போகலாமென்று தோன்றி கிளம்பிச் சென்றேன்.

“உள்ள வாங்க ரவி” என்று அவர் குரல் கேட்டு அவரது வீட்டினுள் நுழைந்த போது, அவரது சமையலறையில் பழங்கள் நறுக்கிக் கொண்டிருந்தார்.

 

“வைஃப்  தஞ்சாவூர் போயிருக்காங்க, ரவி. இன்னைக்கு நைட் டின்னர் வெறும் ஃப்ரூட்ஸ் தான். எடுத்துக்க”

 

வெட்டி வைத்த பழத்தட்டுகளுடன் அவரது படிக்கும் அறையில் உள்ள மூங்கில் நாற்காலிகளில் உட்கார்ந்தோம். புத்தக வாசங்களுடன்,  வெட்டி வைத்த கொய்யா, ஆப்பிள், வாழைப்பழங்களுடன் சேர்ந்தமைந்த வாசனை,  முன்னிரவின் சிறகசைப்பை மென்மையானதாக மாற்றின.

 

கல்லூரி நிகழ்வுகள், சமீபத்திய திரைப்படங்கள், நாவல்கள், என எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த உரையாடல்கள் மறுபடி இசையை நோக்கி வந்தடைந்தது.

“ரெண்டு மூணு நாளா சரியான தூக்கமில்ல, ரவி. ஒரே கனவு மறுபடி மறுபடி வருது..”

 

“ம்”

 

“கனவுன்னு சொல்லிட முடியாது. .என்னோட ஆரம்ப காலத்துல, நான் ப்ரைமரி ஸ்கூல் டீச்சரா ரெண்டு வருஷம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். திருவையாறு போற வழியில இருக்கிற ஒரு ஆத்தோரத்து கிராமத்து ஸ்கூல்ல. அன்னைக்கு மதியம், பிள்ளைங்கல்லாம் க்ரௌண்ட்ல விளையாடிட்டு இருந்தாங்க. நல்ல காத்து. மரங்களோட சலசலப்பும் குழந்தைகளோட விளையாட்டு சத்தமும் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதயெல்லாம் தாண்டி யாரோ புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி ஒரு பிரமை. பிரமையா இல்லனா அது தான் உண்மையானு கூட தெரியல. ரொம்ப ஃபீபுலா இருந்தது அந்த சவுண்ட். ஏதோ எனக்குள்ளையே யாரோ வாசிக்கிறது மாதிரி. பரீட்சைத்தாள்களை எல்லாம் கையில எடுத்துட்டு க்ரௌண்டுக்கு நடுவில் நின்னுட்டு இருக்கும்போது, என்னை மீறி எல்லா பேப்பர்சையும் கை நழுவ விட்டுச்சு”

 

“அப்போவெல்லாம் மியூசிக் கேட்பீங்களா?”

 

“அப்போ, என்கிட்ட ரேடியோ கூட இல்ல”

 

“ம்ம்”

 

“அடிச்ச காத்துல எல்லா குழந்தைகளும் ஆளாளுக்கு ஓடிப்போய் பறந்துட்டு இருக்கிற தாள்களை தவ்வி பிடிச்சு, கீழிருக்கிற தாள்களை கலக்ட் பண்ணி சுத்தி நின்னுட்டு எல்லா பேப்பர்சையும் என்கிட்ட நீட்டிட்டே நின்னாங்க”

 

அவர் என்னை பார்க்கவில்லை. என்னைத் தாண்டியுள்ள சூன்யத்தை பார்த்தார்.

 

“ஆனா எல்லாக் கொழந்தைகளோட கண்ணும் ஒரு சேர என்னை பாத்த அந்த மொமென்ட், மனசே சிலிர்த்து போச்சு. அப்பவும் அந்த புல்லாங்குழல் கேட்டுட்டே தான் இருந்தது.. இந்த நினைவு தான் கனவா வந்துட்டே இருக்கு ரெண்டு நாளா. இத நான் டிகன்ஸ்ட்ரக்ட் பண்ணலாம் விரும்பல. ஆனாலும்…”

 

“ஆனாலும்?”

 

“ஒரு வேளை, நம்ம ஃலைப்ல நாம தொடர்ந்து தேடற சில கேள்விகளுக்கு பதிலாக இதெல்லாம் இருக்குமோன்னு தோணிடுது”

 

“எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டா இ.ஜி? இப்போதைய கேள்விகளுக்கு எப்படி பாஸ்ட்ல நடந்த சம்பந்தமில்லாத மொமென்ட்ஸ் பதிலா அமையும்?”

 

“ஃப்ராய்ட்  தான் பதில்  சொல்லணும்” என்று புன்னகைத்தார்.

 

சட்டென கவனித்தேன். தூரத்தில், சுவற்றில் அவரது மகள் வரைந்து ஃபிரேம் போட்டு வைத்திருந்த இரண்டு தஞ்சாவூர் ஓவியங்களுக்கு கீழிருந்த மேஜையில் இருந்தது அவருடைய ஷெனாய்.

 

“இ.ஜி. உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை நீங்க உங்க கூடவே தான் வெச்சுருக்கீங்க. ஆனா, வார்த்தைகளற்ற பதில்கள் அவை” என்று அவர் கையை பிடித்துக்கொண்டு, ஷெனாயை பார்த்துக்கொண்டு சொன்னேன்.

 

அவர் கண்கள் சற்றே கலங்கியிருந்தது.

 

***************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

உந்தன் பாடல்களில் நான் நீலாம்பரி

உங்கள் கனவுகள் சில வேளைகளில் எப்படி அலைக்கழிக்கும், ஆனந்தபடுத்தும், யாருக்கும் தெரியாமல் குளியலறையில் அழ வைக்கும், கனவு வந்த அந்த நாளில் வேறேதும் செய்யாமல் அந்த கனவின் நீட்சியாக உங்கள் நினைவை முடிச்சிட்டு ஜன்னலோரம் உட்கார்ந்து அன்று பெய்யாத மழையை உங்கள் மேல் தெறிக்காத சாரலை உங்களில் உருவாக்கிக்கொண்டு ஒரு தேனீருடன் உங்கள் உலகத்தில் உலவச்செய்யும். அப்படிப்பட்ட கனவுகளின் நீட்சியாக நான் பாடல்களை சொல்வேன். மறக்கவே முடியாத பாடல்கள்.

Johnnyflim4 foto
நீங்கள் பிறந்த ஆறாம் மாதம் உங்கள் அம்மம்மாவால் பாடப்பட்ட அதிசயமாக இன்றும் உங்கள் நினைவில் எழும் பாடலாக,
உங்கள் பள்ளிக்கூட விடுமுறை பயணத்தில் வழியில் சாப்பிட எங்கோ நிறுத்தப்பட்ட ஒரு அறியப்படாத சிற்றூரின் கூரை வேய்ந்த சாம்பல் புகை வெளியே கசியும் கடையில் கேட்ட பாடலாக,
உங்களின் முதல் காதலிக்கெனவே எழுதப்பட்ட பாடலாக,
நீங்கள் முதல் முறையாக அவமானப்பட்ட அன்று கேட்ட அந்த உத்வேக பாடலாக,
அடைமழை காலத்தில் கடும் காய்ச்சலில் பத்து நாட்களென படுத்திருந்தபோது உங்களின் கதகதப்புக்கு இதமாக உங்கள் தலையை வருடிய ஓர் அற்புதபாடலாக ,
நீங்கள் மிகவும் நேசித்த அந்த நபர் உங்களை விட்டு சென்ற அன்று எங்கோ ஒரு தூரத்தில் யார் வீட்டிலிருந்தோ ஒலித்த அந்த பாடலாக,
மரணத்தின் அருகில் சென்று மீண்டெழுந்த தருணங்களில் நீங்கள் உங்களை ஒரு குளமாக பாவித்து கரைந்தழுது கேட்ட பாடலாக,
உயிரின் அத்தனை செல்களும் வெற்றியை துரத்தி, ரத்தம் வேர்வையென சிந்தி நீங்கள் அடைந்த பெரிய வெற்றியின் பாடலாக,
நட்பின் பாடலாக,
துரோகத்தின் பாடலாக,
அன்பின் பாடலாக,
அந்திமத்தின் பாடலாக,
மரணத்தின் பாடலாக,
உயிர்த்தெழுதலின் பாடலாக,
என் வாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றிய பாடல்களினை அவை என்னுள் உருவாக்கிய அக எழுச்சியை , உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்,
ஒவ்வொரு நாளும்.
 

முதல் பக்கம்

முதல் வாக்கியத்தை எழுதுவதற்கு முன்பு ஏற்படுகிற மனத்தடை மிக அழுத்தமானதாக இருக்கிறது. கையில் நான் வைத்திருக்கும் புத்தகமோ என்னை மலைத்து பார்க்க வைக்கிறது. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’. சொற்களே கவிதையாகி. இந்த ஞாயிற்றுகிழமையின் ‘முன்மதிய’ வேளையில், மொட்டைமாடிக்கு அருகில் உள்ள அறையின் தனிமையில், ‘சிப் சிப்’ என்று சொல்லிவைத்தாற்போல் மூன்று நொடிகளுக்கு ஒரு முறை சப்தம் எழுப்பிகொண்டிருக்கும் அந்த குருவி உட்கார்ந்திருக்கும் பலாமரத்தின் கிளையை ஜன்னல் வழியாக பார்த்தவாறு உட்கார்ந்துகொண்டு, ஆழ்ந்து உறிஞ்சு குடித்து கொண்டிருந்த தேநீரின் சுவை உள்ளிறங்கி சென்றுகொண்டிருக்கும் அந்த தருணம், புத்தகத்தை மூடி வைத்து விட்டு மடிக்கணினியை திறக்கிறேன்.

நண்பர் மதனுடன் பணிபுரிந்த காலத்தில் எனக்கு அடிக்கடி சொல்வார், “எழுதிட்டே இருக்கனும் டா கேட்ஸ், சுஜாதா சொல்ற மாதிரி ‘எழுதுவதே எழுத்தின் ரகசியம்’ என்று. அதனால எழுதறத நிப்பாட்டாத. நிறைய படி. நிறைய எழுது. பெஸ்ட்டுனு படரத மத்தவங்களுக்கு படிக்க கொடு. கூர் தீட்டிகிட்டே போகவேண்டியது தான். அதோட சந்தோஷம் போக போக தான் தெரியும்.” கடந்து சென்ற மூன்று நான்கு வருடங்களின் நினைவுகள் ஏழு எட்டு சிறுகதைகளுக்கு கருவாக, அல்லது ஓரிரண்டு குறுநாவலின் வடிவமாக, எழுதப்படாமல், சுவை குன்றாத சூவிங் கம் போல என் மனதில் மட்டும் உள்நாக்கின் ஜீவனை தடையில்லாமல் எச்சில் சுரக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதோ நான் ஆரம்பித்து எழுதிய ஒரே ஒரு பதிவு ஒரே ஒரு சிறுகதை என, லட்சங்களில் ஒரு Blogger-ஆக தான் இருக்கிறேன். அம்மா அடிக்கடி சொல்வது போல், நான் ஏறக்குறைய ஒரு ‘அரைகுறை’ தான், அல்லது நண்பர்கள் சொல்வது போல் முழுவதுமாக (நாய் வாய் வெக்கறது மாதிரி தான் நீ! அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம். ). சிறிது காலம் கிடார், சொற்ப நாட்களுக்கு யோகா, விட்டு விட்டு ஓவியம் என எதையும் முழுமையாக கற்றுக்கொள்ளாமல் பெருமழைகாலங்கள் வருடாவருடம் கடந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த வருடம் அப்படி ஒரு மழையும் வந்தபாடில்லை, என் மேல் எனக்கு நம்பிக்கையும் வந்தபாடில்லை. ‘ஒன்றே செய், அதை நன்றே செய்’ என்ற வாக்கியம் அதிதூரத்தில் புகைநடுவே இருந்து தெரிவது போல் ஒரு பிரமை. தெளிவுற தெரியும் முன்னமே மயங்கி சரிகிறேன். வேறொரு பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன், நினைவு திரும்பியபோது.
****
மதியஉணவு.
****
இந்த டவுன்ஷிப் வந்ததிலிருந்து கண்கள் பச்சை நிறத்திற்கு மிகவும் பழகிவிட்டது. எந்த கதவை எந்த ஜன்னலை திறந்தாலும் பச்சை தான். மரங்கள் செடிகள் புதர்கள் என. ஜன்னல் வெளியிலிருந்து எட்டி எட்டி பார்ப்பது போல் கொய்யா இலைகள் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறது. அடுத்த வீட்டின் தோட்டத்தில் நாவற்பழமரம். ஒரு கிளை முறிந்து அவர்கள் வீடு மொட்டைமாடியில் விழுந்து கிடந்தது.பழங்கள் சிதறி கிடக்கின்றன. நான் பார்க்காத நிமிடங்களில் வானிலிருந்து தேவதை குழந்தைகள் அவற்றை அள்ளிச் செல்லலாம்.  அவர்களின் காலடித்தடத்தை அழிக்க அனுப்பிசென்றுள்ளனர், மழைத்தூறலை. மழைக்கால பின்மதியம், மனதை பிசையும். அதுவும் ஜுரம் வருவது போல் ஒரு நடுக்கம் கொண்ட உடல்நிலையில், மேகம் சற்று இருண்டு, வெளிச்சக்குறைவான அறையில், ஜென் புல்லாங்குழல் இசையை கேட்டுக்கொண்டு, படிக்கப்படாத புத்தகங்களின் பக்கங்களை புரட்டியபடி இருக்கும் நான், அந்திமத்தின் கடைசி வெயிலை எதிர்நோக்கியபடி இருக்கும் ஒரு பாட்டாவின் கனவில் வருவது போல், தூக்கத்திற்கும் தூக்கமின்மைக்கும் நிஜத்திற்கும் நிஜமின்மைக்கும் இடையே இருக்கும் பாலத்தில் நின்று கொண்டு இருக்கிறேன். இடையே செல்கிறது நினைவு நதி. முன்பு கரைபுரண்டோடிய நினைவுகள் இன்று வறண்டு போய். எனது மணலும் அள்ளப்படுகிறது. தூக்கம் தள்ளுகிறது இப்போது.
Image
  • கடந்த வாரம் ‘Spirited Away’ என்ற ஒரு அனிமேஷன் படத்தை நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். எங்கள் மூணு பேரையும் காசுபணம் வாங்காமல் ஒரு மாபெரும் மாயஉலகிற்கு கொண்டு சென்றார் மியாசகி. பால்யகாலத்தில் பார்த்திருந்தால் ஒரு வருடத்திற்கு மேல் இந்த படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்திருப்பேன். என்னோடு சேர்ந்து பார்த்த பிரகாஷ், வீட்டிற்கு சென்ற பிறகு குறுஞ்செய்தி அனுப்பினான், ‘சீனியர். ஜென் கதைகள படிச்ச மாதிரி இருந்துச்சு. சூப்பர்’ என்று. புரியவில்லை என்பதை தான் இப்படி சொல்கிறானோ என்று தோன்றியது. ( ஜென் தத்துவங்கள் பற்றி பேசும் அளவுக்கு நான் இன்னும் எளிமையை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை)

Image

  • அடிக்கடி என்னை நான் இப்படி நினைத்துகொள்வதுண்டு. எண்பதுகளின் இளைஞனாக. இங்கிருக்கும் என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னை பற்றி சொல்வது, ‘நீங்க சரியான 80s ஆளு னா. எப்போ பார்த்தாலும் பழசையே பேசிக்கிட்டு, பழைய பாட்டையே கேட்டுகிட்டு, ஆதி காலத்துல வந்த படத்தையே பாத்துகிட்டு. sync-எ வரமாட்டிகுது அண்ணன்.’  ஒரு வேளை நான் நிஜமாகவே அப்படிதானா என்று தெரியவில்லை. கடந்து போன நிகழ்வுகளை நினைத்து பார்த்து, நண்பர்களிடம் பேசி பார்த்து, புகைப்படங்களின் புன்னகையின் பின்னணியை மனதினுள் மறுவார்ப்பு செய்து, இப்படியாக. ஆனால் என் துரதிர்ஷ்டம், பழைய கடிதங்களை படிக்கலாமெனில் என்னிடம் எனக்கென்று எழுதப்பட்ட கடிதம் என்று ஒன்று கூட இல்லை. வாழ்த்து அட்டை கடிதமாகிவிடாது அல்லவா. கடந்த இருபத்தைந்து வருடத்தில் ஒரு கடிதம் கூடவா வந்திருக்காது. தொலைபேசி காலத்துக்கு முந்திய வருடங்களில் என்னை பற்றி ஒரு வரியில் விசாரித்து என் அம்மாவிற்கு அனுப்பிய மாமாவின் கடிதங்கள் மட்டும் இருந்திருக்கக்கூடும். அது எனக்கு அனுப்பிய கடிதமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்றும் ‘கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள்’ ஆகவே ஆகாது. ஆக, ‘கடிதங்கள் வரப்பெறாத வாழ்க்கைய’ வாழ்ந்துகொண்டிருக்கிறேன். முரகமியின் the window சிறுகதை நினைவுக்கு வருகிறது.

Image

 
  • முதல் பதிவில் ஒரு கவிதை இருந்தால் அழகாக இருக்கும். கவிதைக்கும் எனக்கும் வெகுதூரம். அதனால், எனது மனதிற்கினிய கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை ஒன்று.
ஒரே ஒரு தினம்
 
திடீரென்று ஞாபகம் வந்தது
பூக்கார  அம்மாவின் குரலை கேட்டு 
இரண்டு மூன்று தினங்கள்
இருக்ககூடும் என.
இப்போது நான் அலுவலகத்தின்
ஆவண காப்பரையில் இருக்கிறேன்.
குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த
ஒரு கிழ நரிக்குறவரின் முகம்
ஆழ்ந்த வாழ்வின் சுருக்கங்களுடன்
முன்வந்த சமயம் நான் ஒரு
அருவியின் பக்கத்தில்.
மயானத்திற்கு பக்கத்து
செங்கல் சூளையை பருத்த ஸ்தனங்களை 
நினைத்தபடி கடந்தேன்.
மின்சாரம் போன ஒரு மெழுகுச்சுடர்
இரவில் இறந்து கிடந்தார்கள் 
சுபாவும் சிவராசனும் சகாக்களுடன்.
மகப்பேற்று மருத்துவ மனையில் 
ஒரு சிசுவை ஏந்துகையில் 
காற்றுக்கு லேசாக அசையும் 
கார்த்திகை அகல்கள் ஏற்றின
கௌரியின் சிரிப்பு.
எல்லா வருடங்களையும் 
எழுதிவிடும்படியாக இருக்கிறது
இந்த ஒரே ஒரு தினத்தின் நாட்குறிப்பு.
இன்னும் எழுதலாம் என்று தோன்றுகிறது.
எழுதுவதில் தானே எழுத்தின் ரகசியம் அடங்கி இருக்கிறது.